யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய்யில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகமும் போராட்டகாரர்களால் தீவைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் போராட்டத்தில் குண்டர்கள் புகுந்து குழப்பம் ஏற்படுத்தினர்.
இதனால் நாடு முழுவதும் வன்முறை வெடித்த நிலையில், அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களின் வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
நேற்றைய தினமும் நாடு முழுவதும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், நடைமுறையில் இருந்த ஊரடங்கு சட்டம் 12ம் திகதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் பசில் ராஜபக்ச உள்ளிட்ட முக்கிய நபர்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய்யில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகத்திற்கும் தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.