இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் (Qi Zhenhong) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு சகோதரத்துவத்தின் கரங்களை நீட்டுமாறு சீனத் தூதுவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் இலங்கை தற்போது எதிர்நோக்கும் நிலைமை குறித்து கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நாட்டை வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சி செய்வதற்கும் இலஞ்சம், ஊழல், அடக்குமுறைகளை ஒழிப்பதற்கும் தமது நிர்வாகத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து இலங்கை மீள்வதற்கு சீனாவின் தாராளமான ஆதரவு மிகவும் அவசியமானது என தெரிவித்தார் . இவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவும் கலந்துகொண்டார்