இலங்கையின் மூவின மக்களாலும் நேசிக்கப்படும் மனிதன் சங்கக்கார இவரே அடுத்த தலைவராக வரவேண்டும் என முகநூலில் நபர் ஒருவர் குறித்த கருத்தை பதிவிட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலவரங்களும் அதை அடக்குவதற்கு ஊரடங்கு பிறப்பித்து இராணுவம் அழைக்கப்பட்டிருப்பதையும், அரசின் சில ரவுடி ஆதரவாளர்கள் அமைதியான முறையில் அரசின் ஊழல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்களை தாக்க முற்பட ரவுடிகளைத் திருப்பித் தாக்கும் அலங்கோலத்தை சர்வதேச ஊடகங்களில் பார்க்க முடிகிறது.
இந்தக்காட்சிகள் 92ம் ஆண்டில் இதே நாளில் ருவாண்டாவின் வீதிகளில் இரு இனங்களுக்குள் நடைபெற்ற படுகொலைகள் அடிதடிகளை நினைவுக்குக் கொண்டுவருகின்றன.
இலங்கையின் அரசின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் முக்கிய அமைச்சுப் பதவிகளிலும் இருக்கும் ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழலே அந்த நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்துக்குச் செல்லக் காரணம் என்றும் இதனால் மக்கள் அன்றாட உணவுக்கே கஷ்டப்படுகிறார்கள் என்றும் எனவே ராஜபக்ச குடும்பத்தினர் உடனடியாகப் பதவி விலகி நல்லோர் ஆட்சியில் அமரவேண்டும் என்பதே பொதுமக்களின் போராட்டத்துக்கான காரணம்.
எல்லாம் சரி, ராஜபக்ச குடும்பம் பதவி விலகவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்துக் கிடையாது ஆனால் அதற்குப் பின்னர்,
இலங்கையை வழிநடத்தக்கூடிய ஆளுமையுள்ள ஒருவர் இலங்கை அரசியலில் எதிர்க்கட்சிகளில் இருக்கின்றாரா?
எதிர்க்கட்சிகளின் தலைவர்களில் ஒருவரிடமாவது சிறந்த தலைமைத்துவப் பண்புகள் இயற்கையாகாவே காணப்படுகின்றனவா?
அங்கு வாழும் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் எல்லோராலும் விரும்பப்படும் ஒருவராவது எதிர்க்கட்சிகளின் தலைமைப் பதவியில் உள்ளாரா?
மூவின மக்களையும் சமமாக நடாத்தியவர் என்ற வரலாறு கொண்ட எவராவது எதிர்க்கட்சித் தமையில் உள்ளனரா?
மேலேயுள்ள கேள்விக்கெல்லாம் பதில் இல்லை என்பதே. அப்படியானால் ராஜபச்சாக்கள் பதிவியிலிருந்து ஓடியபின்னர் அந்தநாட்டை பொறுப்பாக நிர்வகித்து சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி நடாத்திச் செல்லக்கூடிய மிகுந்த புத்திசாலியான தலைவர் ஒருவர் அவசியம் தேவை.
அந்தத் தலைவர்,
மூவின மக்களாலும் நேசிக்கப்படும் ஒருவராக இருக்கவேண்டும்.
அந்தத் தலைவர் துவேஷங்கள், மதமூட நம்பிக்கை முட்டாள்தனங்கள் எதுவுமில்லாத நல்ல மனிதனாக இருத்தல் அவசியம்.
சர்வதேச அறிவுடன் இருக்கவேண்டும்
அயல்நாடுகளாலும், சர்வதேசங்களின் தலைவர்களினாலும் மதிக்கப்படும் ஒருவராக இருந்து அதனூடாக எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவைப் பெறும் ஒருவராக இருத்தல்வேண்டும்
இலங்கையின் தற்போதைய முக்கிய எதிர்க்கட்சிகள் எவற்றிலும் மேலே நான் குறிப்பிட்டுள்ள தகைமையுள்ள எவராவது இருக்கிறார்களா என்றால் இல்லையென்பதே பதில், அப்படியாயின் இலங்கையின் எதிர்காலத் தலைமைப் பொறுப்பு மீண்டும் பொருத்தமில்லாத ஒருவரிடம் செல்வதைத் தவிர வேறு வழியே இல்லையா ?
ஒரே ஒரு வழி இருக்கிறது அது ஒரே ஒருவரால்த்தான் சாத்தியம் அவர் குமார் சங்கக்கார. ஏனென்றால் மேலே நான் குறிப்பிட்ட அனைத்துப் பண்புகளும் கொண்ட மனிதன் எனக்குத்தெரிய சங்கக்காரதான்.
சங்கக்கார இலங்கையின் தலைமைப் பொறுப்பில் அமரவேண்டும் அவர் இலங்கையின் அனைத்து மக்களாலும் விரும்பப்படும் ஒருவர். இதனால் இவர் கூறுவதை மூவின மக்களும் நம்பிப் பின்பற்றுவார்கள் தற்போதைய சூழலில் மூவின மக்களும் ஒற்றுமையாக உழைத்தால் மட்டுமே பொருளாதார இடர்பாட்டிலிருந்து வெளியேற முடியும் அதற்கு இவரிற்கு எல்லா இலங்கையிரிடமும் இருக்கும் நல்ல தன்மானம் கட்டாயம் துணைபுரியும்.
இவர் துவேஷங்கள் இனப் பாகுபாடுகளுக்கு எதிராக துணிந்து குரல் கொடுக்கும் ஒருவர், உலக நாடுகளால் மதிக்கப்படும் ஒரு மனிதன். மிகுந்த புத்திசாலியான இவரிடம் இயற்கையாகவே காணப்படும் தலைமைத்துவப் பண்புகள் இவரை இலங்கையின் மிகச் சிறந்தவொரு தலைவராகி அந்த நாட்டின் பொருளாதாரச் சிக்கலிலிருந்து காப்பாற்ற உதவும் என்பது என் உறுதியான நம்பிக்கை என வேதநாயகம் தபேந்திரன் என்ற நபர் குறித்த கருத்தை முகநூலில் பதிவிட்டுள்ளார்.