தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சவால்களைத் தீர்ப்பதற்கு அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் கண்டறிய இலங்கையின் அனைத்துத் தரப்புகளுக்கும் பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது.
பிரித்தானியாவில் உள்ள வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் நாடாளுமன்ற துணைச் செயலாளர் விக்கி ஃபோர்ட் இதனை தெரிவித்துள்ளார்.
மே 9 அன்று அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து வன்முறை வெடித்ததில் இருந்து இலங்கையின் நிலைமையை பிரித்தானியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா அரசு வெளிநாடுகளில் உள்ள பிரித்தானிய பிரஜைகளின் பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இருந்து பயண ஆலோசனைகள் மற்றும் செய்திகள் மூலம் தொடர்ந்து தொடர்புகொள்வதாகவும் விக்கி ஃபோர்ட் கூறினார்.
எங்கள் ஆலோசனையானது பிரித்தானிய குடிமக்கள் தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது. பயண ஆலோசனை என்பது அறிவுரை மட்டுமே. மக்கள் வெளிநாட்டில் மேற்கொள்ளும் எந்தவொரு பயணத்திற்கும் தனிப்பட்ட பொறுப்பை ஏற்க வேண்டும்.
எங்களின் பயண ஆலோசனையானது, அபாயங்கள் குறித்த எங்களின் சமீபத்திய மதிப்பீட்டை பிரதிபலிக்கிறது என்பதை உறுதிசெய்ய, தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள பிரித்தானிய பிரஜைகளுக்கு தூதரக ஊழியர்கள் முழு அளவிலான தூதரக சேவைகளை தொடர்ந்து வழங்கி வருவதாகவிக்கி ஃபோர்ட் மேலும் தெரிவித்துள்ளார்.