நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை பயன்படுத்தி எரிபொருட்களைப் பதுக்கி விற்பனை செய்யும் வியாபாரிகளைத் தேடிப்பிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்திலும் எரிபொருட்களைப் பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.
பொலிஸாரின் சுற்றிவளைப்பில் கைது
முல்லைத்தீவு – வெலிஓயா பிரதேசத்தில் பெட்ரோல் விற்பனை செய்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பெட்ரோல் மற்றும் டிசலை சேமித்து வைத்து, விற்பனை செய்த சந்தேகநபர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிற்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய புதுக்குடியிருப்பு- வசந்தபுரம் பகுதியில் கடந்த 25 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வர்த்தக நிலையமொன்றில் சட்ட விரோதமாக பெட்ரோல் மற்றும் டீசலை மறைத்து வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து 226 லீற்றர் எரிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் எரிபொருளுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெட்ரோல், டீசல் வந்தவுடன் அவற்றை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொள்வனவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.