திருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தானியகம பிறீமா விடுதிக்கு அருகில் போதை மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தரொருவரை கைது செய்துள்ளதாக விசேட பொலிஸ் அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
போதைமாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட பொலிஸார்
இவ்வாறு கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் திருகோணமலை பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வரும் 69842 சீனக்குடா – ஐந்தாம் கட்டை – கெமுனுபுர பகுதியைச் சேர்ந்த அனுருத்த (25 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை – சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் உத்தியோகத்தரை சோதனையிட்டபோது அவரிடமிருந்து 450 போதைமாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை விசேட பொலிஸ் அதிரடி படையினர் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.