தற்போதைய நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சர்களை பாதுகாக்க நினைக்க மாட்டார், அவ்வாறு செய்தால் ராஜபக்சர்களுக்கு நிகழ்ந்ததே ரணிலுக்கும் நடக்கும் என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மிகவும் தீவிரமான நேரம் இது
ரணில் விக்ரமசிங்க இவ்வாறான சூழலில் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாக்க நிச்சயமாக நினைக்க மாட்டார். அவருக்கும் அதே நிலைதான் ஏற்படும் என்பதை அவர் அறிவார். நாட்டின் தற்போதைய நிலையில் யாரும் விளையாடுவதற்கான நேரம் அல்ல. மிகவும் தீவிரமான நேரம் இது.
அபாய கட்டத்தில் பசில்
தற்போது, பசில் ராஜபக்ச தீவிரமான யோசனையில் இருக்கின்றார். 21ஆவது திருத்தத்தின் பின்னர் தான் எப்படி வாழப் போகின்றேன் என்ற யோசனையில் அவர் உள்ளார். இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமை இல்லாமல் போகும் அபாயத்தில் உள்ளது. ஒன்று பசில் ராஜபக்ச மற்றொன்று கீதா என குறிப்பிட்டுள்ளார்.
நாடு அநாதையாக்கப்படலாம்
கோட்டா கோ கம போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையாக கோட்டாபய பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனால் ஜனாதிபதியும் பதவி விலகி, நாடாளுமன்றமும் இல்லாமல், பிரதமரும் இல்லையெனில் இலங்கை அநாதையாகிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.