இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய நாடுகள் சபை, உணவு மற்றும் மருந்துகளுக்கான முறையான சர்வதேச வேண்டுகோளை எதிர்வரும் புதன்கிழமை விடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச அமைப்புக்களின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் பிரதமர் விக்ரமசிங்க நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) இலங்கை பிரதிநிதி விம்லேந்திர ஷரன் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) துணை பிரதிநிதி மாலின் ஹெர்விக் ஆகியோருடன் கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
இலங்கையின் தற்போதைய உணவு நிலைமையை மையமாக வைத்து இந்தப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதன்போது உணவுப் பற்றாக்குறையின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, விவசாயத் திணைக்கள அதிகாரிகளால் உணவுப் பாதுகாப்புத் திட்டம் ஒன்று தொகுக்கப்பட்டு வருவதாக விக்கிரமசிங்க விளக்கமளித்துள்ளார்.
இந்த திட்டம் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது என்று தெரிவித்துள்ள விக்கிரமசிங்க, இந்த முயற்சிக்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் தமது ஆதரவை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல்களை ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹன்னா சிங்கர்-ஹம்டி உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் கோரிக்கையை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தமது பங்காளி அமைப்புகளுடன் இணைந்து, நாட்டின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்ய நான்கு மாத திட்டத்தைத் தயாரித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையில் உர பற்றாக்குறையை சமாளித்து, விவசாய சமூகத்திற்கு உதவும் ஒரு புதுமையான விவசாய உதவி திட்டத்தை தொகுத்து வருவதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் கூறியுள்ளது.
இந்தநிலையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டால், நிலவும் விவசாய பற்றாக்குறையை ஐந்து முதல் ஆறு மாதங்களுக்குள் குறைக்க முடியும் என்று பிரதமர் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.