21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக நீதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தேச திருத்தச் சட்டத்திற்காக தற்போது கட்சிகளிடம் இருந்து புதிய யோசனைகள் பெறப்பட்டு வருகின்றன.
அடுத்த மாதம் விவாதத்திற்கு எடுக்கப்படும்
அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாளைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனையடுத்து ஒரு வாரத்தின் பின்னர் திருத்தச் சட்டம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவுள்ளது.
அன்றில் இருந்த ஒரு வார காலத்திற்குள் திருத்தச் சட்டம் சம்பந்தமாக உயர் நீதிமன்றத்தில் முறைப்பாடுகளை தாக்கல் செய்யும் தரப்பினருக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்.
உயர் நீதிமன்றம் 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை ஆராய்ந்து 21 நாட்களுக்குள் சபாநாயருக்கு தனது முடிவை அறிவிக்கும்.
இதனையடுத்து திருத்தங்கள் தேவைப்படுமாயின் திருத்தங்களை செய்து, ஜூலை மாதம் முதல் வாரத்தில் திருத்தச் சட்டம் விவாதத்திற்கு எடுக்கப்படும்.
21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதாவது 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படுகிறது.
21வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்கும் சுதந்திரக் கட்சி மற்றும் ஜே.வி.பி
இதனிடையே 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு தமது கட்சி தேவையான ஆதரவை வழங்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தமது கட்சியின் சார்பில் 10 யோசனைகள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க மக்கள் விடுதலை முன்னணியும் இணக்கம் வெளியிட்டுள்ளது.
எதிராக செயற்பட போகும் ஐக்கிய மக்கள் சக்தி
இவ்வாறான நிலைமையில், 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக செயற்படுவது என ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக அதன் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த திருத்தச் சட்டத்தில் உள்ள சில ஷரத்துக்கள் 19வது திருத்தச் சட்டத்தை விட பின்தங்கிய விடயங்களை கொண்டிருப்பதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனால், ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கும் யோசனைகளையும் திருத்தச் சட்ட வரைவில் சேர்க்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.