அமைச்சுக்களின் கீழ் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களை திடீரென்று பதவி நீக்கம் செய்யக்கூடாது என்று ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் இது தொடர்பான சுற்றுநிருபம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த சுற்றுநிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுற்றுநிருபத்தில் உள்ளடங்கியுள்ள விடயம்
அமைச்சுகளின் கீழ் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களை தன்னிச்சையாக நீக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு நிறுவனத் தலைவர்கள் பதவி நீக்கப்பட வேண்டுமாயின் முன்கூட்டியே ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவிக்கப்பட வேண்டும்.
அவ்வாறின்றி ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவிக்காமலோ, ஜனாதிபதி செயலக இணக்கப்பாடு இன்றியோ எந்தவொரு அரச நிறுவனத்தின் தலைவரும் பதவி நீக்கம் செய்யப்படக் கூடாது என்றும் காமினி செனரத் குறித்த சுற்று நிருபத்தில் அமைச்சின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.