மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
அதன் பின்னர், புதிய ஆளுநரையோ அல்லது தற்போதைய ஆளுநரையோ ஜனாதிபதி மீண்டும் நியமிக்க வேண்டும் என மத்திய வங்கி தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அரசியலமைப்பு சூழ்நிலையில் மத்திய வங்கிக்கு புதிய ஆளுநரை நியமிப்பதற்கு முன்னர் நிதி அமைச்சரின் எழுத்துப்பூர்வ பரிந்துரையை ஜனாதிபதி பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
நிதியமைச்சின் பரிந்துரை
அதற்கமைய, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சராக பொருத்தமான பெயரை பரிந்துரைக்க வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.
மத்திய வங்கியின் ஆளுநரின் பதவிக்காலம் பொதுவாக ஆறு வருடங்களாகும். 2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியின் பதவிக்காலத்தின் கடைசி மாதங்களையே தற்போதைய ஆளுனர் நந்தலால் வீரசிங்க கழித்து வருகின்றார்.
குமாரசாமி 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை தனது பதவிக் காலத்தை முடிக்காமலேயே பதவியை ராஜினாமா செய்தார், அவருக்குப் பதிலாக பேராசிரியர் W.D. லக்ஷ்மன் மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்டார்.
அதன்பின் அஜித் நிவார்ட் கப்ரால் சிறிது காலம் ஆளுநராக பதவி வகித்தார். அதன் பின்னர் நந்தலால் வீரசிங்க அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
இந்திரஜித் குமாரசுவாமியின் பதவி விலகல்
இதேவேளை, 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான மத்திய வங்கியின் ஆளுநரின் ஆறு வருட பதவிக்காலம் நிறைவடையவுள்ளது. அதனால்தான் புதிய ஆளுநரை அல்லது இந்த ஆளுநரையே மீண்டும் நியமிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நியமனத்தில் கோட்டாபயவுக்கும் ரணிலுக்கும் இடையில் முரண்பாடுகள் வெடித்துள்ளதாக தெரிய வருகிறது. தனக்கு நெருக்கமான தினேஷ் வீரக்கொடியை ஆளுநராக நியமிக்க வேண்டும் என பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார். எனினும் அதனை மறுக்கும் ஜனாதிபதி கோட்டாபய, நந்தால் வீரசிங்கவை தொடர்ந்தும் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக அரசியல்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன