இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் முடிவடையும் தருவாயில் உள்ளதால் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட எரிபொருள் காரணமாகக் கடந்த மாதம் இலங்கையில் ஏற்பட்ட பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஓரளவுக்குச் சீர்செய்யப்பட்டது.
அதற்கு முன்னர் எரிபொருள் நிரப்பிய கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து தமக்கான கட்டணத்தை டொலரில் பெற்றுக் கொள்ளும் வரை நாள் கணக்கில் துறைமுகத்தில் காத்திருக்க நேர்ந்ததன் காரணமாகத் தாமதக் கட்டணம் பெருளவில் செலுத்த நேர்ந்திருந்தது.
இலங்கையை வந்தடையவுள்ள கடைசி கப்பல்
இந்நிலையில் இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் நிரப்பிய கடைசிக் கப்பல் எதிர்வரும் 16ம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.
அத்துடன் இலங்கைக்கான இந்தியக் கடனுதவித் திட்டம் பூர்த்தியாகிவிடும். இலங்கையின் டொலர் கையிருப்பு கடுமையான பற்றாக்குறையில் காணப்படும் நிலையில் புதிதாக டொலர்களை தேடிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படாது போனால் மீண்டும் எரிபொருள் பற்றாக்குறை தீவிரமாக ஏற்படும் அபாயம் உள்ளதாக எரிபொருள் கூட்டுத்தாபன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.