சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ரஞ்சனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ரஞ்சன் ராமநாயக்க, குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்ததாக தொடரப்பட்ட இரண்டாவது வழக்குக்காக அவர் இன்று உயர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதற்கு முன்னர், 2021 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி, நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது, அவர் அத்தண்டனையை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.