எரிபொருள் வழங்குவதில் சுகாதார சேவைப் பிரிவினருக்கு மறுக்கப்பட்டுள்ள முன்னுரிமை நடவடிக்கை காரணமாக வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெல்லன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் வழங்குவதில் சுகாதார சேவைப் பிரிவினருக்கு முன்னுரிமை அளிப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்தபோதிலும், இதுவரையிலும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
வைத்தியர்கள் மற்றும் சுகாதார சேவைப்பணியாளர்களின் வருகை வீழ்ச்சி
இதன் காரணமாக பல மணிநேரம் வீதிகளில் எரிபொருளுக்காக காத்திருந்து வைத்தியசாலைக்கு வருகை தரும் வைத்தியர்கள் மற்றும் சுகாதார சேவைப் பணியாளர்கள் எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த நிலை தொடருமானால் நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலை உருவாகும் எனவும்,அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
கறுப்புச் சந்தையில் அதிகரிக்கும் எரிபொருள் வர்த்தகம்
மேலும், கறுப்புச் சந்தையில் எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் மோசடிகாரர்கள் எரிபொருட்களை பதுக்கி வைப்பதால் இந்த மோசமான நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறுப்பற்று செய்றபடும் குறித்த நபர்களுக்கு எதிராக பொலிஸாரும், இராணுவத்தினரும் மௌனம் சாதிப்பதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லும் வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“எரிபொருள் மாஃபியாக்கள் எரிபொருளை சேகரித்து ஒரு லீற்றர் பெட்ரோலை 650 ரூபாவுக்கும், ஒரு லீற்றர் டீசலை 550 ரூபாவுக்கும் விற்கின்றமையினால், அத்தியாவசிய சேவையான சுகாதார சேவைப் பிரிவினருக்கு எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், இந்த மோசடிக்காரர்களால் அவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு தடையாகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.