தாகத்திற்கு தண்ணீர் கோப்பையை வழங்கும் விதத்தில் காலம் கடந்த முறைமைகள் மூலம் ஒரு நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என இலங்கைக்கான குவைத் தூதுவர் கலாஃப் எம்.எம்.பு தாஹிர் (Khalaf M. M. Bu Dhhair) தெரிவித்துள்ளார்.
குவைத் அரசின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அஷபா மகா வித்தியாலயத்தின் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கைக்கும் குவைத்திற்கும் இடையில் 100 ஆண்டுக்கும் மேலான வரலாறு
குவைத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் இன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டதல்ல. அதற்கு 100 வருடங்களுக்கு மேலான வரலாறு உள்ளது.
நாங்கள் இலங்கையின் முன்னேற்றத்தின் உதவியாளர்கள். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் குவைத்தில் தொழில் புரிகின்றனர்.
இந்த நெருக்கடி இலங்கைக்கும் குவைத்திற்கும் வரையறுக்கப்பட்ட பிரச்சினையல்ல.
இந்த நெருக்கடி அனைத்து நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோல் உலகில் தற்போது யுத்தம் ஒன்று நடைபெற்று வருகிறது. அது உக்ரைனுக்கு ரஷ்யாவுக்கும் இடையிலான யுத்தம்.
தாகத்திற்கு தண்ணீர் வழங்குவது போல் பிரச்சினைகளை தீர்க்க முடியாது
உங்களுக்கு தாகம் ஏற்பட்டால், ஒரு கோப்பை தண்ணீரை வழங்க முடியும். இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் உங்களுக்கு மீண்டும் தாகம் ஏற்படும்.
அப்போது என்ன செய்வது?. உங்களுக்கு தண்ணீர் தருவது யார்?. இப்படி பிரச்சினைகளை தீர்க்க முடியாது. காலம் கடந்த முறையின் மூலம் இந்த பிரச்சினையை எந்த அரசாங்கத்தினாலும் தீர்க்க முடியாது.
நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கக் கூடிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் எனவும் குவைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.