புதிய ஜனாதிபதித் தேர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும், அரசாங்கத்திலிருந்து வெளியேறி சுயாதீனமாக செயற்படும் கட்சிகளும் தனக்கு முழுமையான ஆதரவை வழங்கும் என்று நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மக்கள் விடுதலை முன்னணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதிக்கான தேர்வில் போட்டியிடவுள்ளேன்.
இது எனது தனிப்பட்ட முடிவு அல்ல. எனது கட்சியின் ஏகோபித்த தீர்மானத்தின் பிரகாரமே நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
மோசடியாளர்களிடம் மீண்டும் நாட்டைக் கையளிக்க நான் விரும்பவில்லை. மக்கள் போராட்டம் ராஜபக்சர்களை ஓட ஓட விரட்டியடித்துள்ளது.
ஜனாதிபதி தேர்வு
போராட்டக்காரர்கள் ஊழல், மோசடி இல்லாத புதிய ஆட்சியைக் கோரியே நிற்கின்றனர். அவர்களின் கோரிக்கைகளை எடுத்து நோக்கினால் எனக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.
எனவே, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஏகோபித்த தீர்மானத்தின் பிரகாரம் புதிய ஜனாதிபதிக்கான தேர்வில் நான் போட்டியிடவுள்ளேன். மக்கள் விடுதலை முன்னணியுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.