புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் போட்டியிட அநுரகுமார திசாநாயக்க தீர்மானித்துள்ளார் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜே.வி.பியின் பிரச்சார செயலாளருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை, இன்று (16) நண்பகல் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
”புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்ற வாக்கெடுப்பு 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறுவுள்ளது.
விஜித ஹேரத் விடுத்த கோரிக்கை
சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிப்பதற்கான முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம். தொடர்ந்து, ஜனாதிபதி பதவிக்காக பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன.
சர்வக்கட்சி அரசமையுமா என்ற சந்தேகம் எழுகின்ற இதேவேளை, இந்த முயற்சியை நாம் கைவிடாது எம்மால் முடிந்த அளவில் தலையீடுகளை செய்வோம். முயற்சி தோல்வி அடையும் பட்சத்தில், ஜனாதிபதி பதவிக்கு எமது கட்சி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க போட்டியிடுவார்.
நாட்டு மக்களால் கோரப்படும் தலைமைத்துவம் அவர்தான். எம்மால் நாட்டை மீட்க முடியும். அதற்கு அனைத்து எம்.பிக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என விஜித ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவோர்
மேலும், ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் டளஸ் அழகப்பெரும ஆகியோரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளனர். இதற்கான வேட்புமனு எதிர்வரும் 19 ஆம் திகதி தாக்கல் செய்யப்படும்.
இது தவிர, சரத் பொன்சேகா மற்றும் அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் களமிறங்க விருப்பத்தை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.