நாடு எதிர்நோக்கி இருக்கும் நெருக்கடிகளுக்கு பொது இணக்கப்பாட்டுடன் தீர்வை காண்பதே புதிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முதல் கடமையாக இருக்க வேண்டும் என நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்க வேண்டும்
அத்துடன் நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச்சட்டத்திற்கு பதிலாக ஜனநாயக அடிப்படைகளை பாதுகாக்கும் மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நாட்டின் அபிவிருத்திக்கு காரணமாக அமையக்கூடிய புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் பொறுப்பும் புதிய சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு வழங்கப்படும் மிக முக்கியமான பொறுப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.
எமது தாய் நாட்டுக்கு புதிய தலைவரை தெரிவு செய்யும் தீர்மானகரமான புள்ளிக்கு நாடு என்ற ரீதியில் நாம் வந்துள்ளோம்.அது மிகவும் பொறுப்பான கடமையுடன் கூடிய விடயம் என கருதி அதனை நாம் கையாள வேண்டும்.
பிரதான அடிப்படையாக கருதும் நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய அதனை மேற்கொள்ள வேண்டும். இதன் போது அந்த பொறுப்பு நாட்டின் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் மனசாட்சிக்கு அமைய பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்
இதனடிப்படையில், நாட்டின் மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் எதிர்கால நல்லிருப்புக்காக தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை தமது மனசாட்சிக்கு அமைய நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
மேலும் நாடு எதிர்நோக்கியுள்ள தீர்மானகரமான நெருக்குக்கு தீர்வை பெற்றுக்கொள்ள கூடிய விதத்திலான இணக்கப்பாட்டிற்கு அமைய செயற்படுவார்கள் என நாங்கள் நம்புகிறோம் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.