நாட்டில் மிக விரைவாக பொது தேர்தலொன்றை நடத்த வேண்டும் என ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய,ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வாக்கெடுப்புக்கு பின்னர் ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பொது தேர்தல் கோரும் அநுர
இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,“நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகவும் பிரதமராகவும், எதிர்கால அரசியல் ஆசையில்லாத ஒருவரை நியமிக்குமாறு கோரினோம்.
இதன்போது பிரதமர் பதவிக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம், இந்த இரண்டு பதவிகளுக்கும் பெண்கள் இருவரை நியமிக்குமாறு கோரியிருந்தார்.
அவ்வாறு ஒரு அரசாங்கம் அமையுமானால் நாம் அரசாங்கத்துடன் இணைந்து, அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள தயாராகவே உள்ளோம் என நாம் அறிவித்திருந்தோம்.
நாட்டின் நெருக்கடியான சூழ்நிலை
இன்று நாடு பாரிய நெருக்கடிக்குள் உள்ளது. மக்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளுக்கு உரம் இல்லை. கடற்றொழிலாளர்கள் படகை எடுத்து கடலுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளார்கள். குழந்தைகளுக்கு பால்மா இல்லை. இவ்வாறான நிலையில், உடனடியாக பொது தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும் என்றும் நாம் தெரிவித்திருந்தோம்.
ஏனெனில், தற்போதுள்ள இந்த நாடாளுமன்றமானது மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட ஒன்றாகும். இவர்களால் நாட்டை நீண்ட நாட்களுக்கு ஆட்சி செய்ய எந்தவொரு தகுதியும் கிடையாது. எனவே, மிக விரைவாக தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம்.”என கூறியுள்ளார்.