கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
மூர்த்தி,தீர்த்தம்,தலம் ஆகியவற்றை ஒருங்கே பெற்று இராமபிரானால் வழிபடப்பட்டதாகவும் கருதப்படும் மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹோற்சவ கிரியைகள் இன்று காலை தொடக்கம் நடைபெற்றுள்ளன.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதி சௌந்தரராஜ குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்களினால் வழிபாடுகள் நடாத்தப்பட்டுள்ளன.
வருடாந்த மஹோற்சவ தினங்கள்
இன்று காலை தொடக்கம் மகா யாகம்,மூலமூர்த்திக்கு அபிசேகம் மற்றும் கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் எழுந்திருளியுள்ள மூர்த்திக்கும் விசேட பூஜைகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து கொடிச்சீலை ஆலயத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கொடித்தம்பத்தின் விசேட பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை தொடர்ந்து வேத,நாத,தாள,கோசங்களுடன் பக்தர்களின் அரோகரா கோசத்தின் மத்தியில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவமானது பத்து தினங்கள் நடைபெறவுள்ளதுடன்,தினமும் தம்ப பூஜை,வசந்த மண்டப பூஜை,சுவாமி உள்வீதி,வெளிவீதியுலா என்பன நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதுடன், இராமாயன காலத்தில் இராமபிரனால் பிதிர்க்கடன் தீர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் 28ஆம் திகதி ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.