அரசாங்கத்திற்கு எதிராக காலி முத்திடலில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு படையினர் அந்த பகுதியில் இருந்து போராட்டகாரர்களை வெளியேற்றியுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் வெடித்தது. ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும் போரட்டக்களத்தில் இருந்த முக்கியஸ்தர்கள் பலர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர்களும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
சுதந்திர ஊடக இயக்கம்
காலிமுகத்திடல் போராட்ட களத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு 24 மணித்தியாலங்கள் கூட கடப்பதற்கு முன், காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய மனிதாபிமானமற்ற மற்றும் அருவருப்பான தாக்குதலைச் சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
குறித்த சம்பவங்களைத் அறிக்கையிட்டுக் கொண்டிருந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது கமெரா உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
ஊடகவியலாளர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் சேதங்கள்குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. காலிமுகத்திடல் போராட்டக்களத்திற்கு நுழையும் அனைத்து வீதிகளும் அடைக்கப்பட்டுள்ளதால், ஊடகவியலாளர்களுக்கு உள்ளே செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடக சமூகம் மற்றும் வழக்கறிஞர் சமூகத்துடன் இணைந்து இது தொடர்பாக மேற்கொள்ள முடியுமான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயங்கபோவதில்லை என்று தெரிவித்துள்ளது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி
காலி முகத்திடலில் ஜனநாயக வழியில் போராடிய போராட்டக் குழுவினர் மீதும் அங்கு பிரசன்னமாகியிருந்த ஊடகவியலாளர்கள் மீதும் அரச இயந்திரத்தால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.
ஜயந்த விஜேசகர
தமது உரிமைகளை கோரி காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தி வந்த போராட்டக்காரர்கள் மீது தொடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்களை முற்றிலும் கண்டிப்பதாக ஜயந்த விஜேசகர தெரிவித்துள்ளார்.
தமது உரிமைகளை கோரி காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தி வந்த போராட்டக்காரர்கள் மீது தொடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்களை முற்றிலும் கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஈரோஸ் ஜனநாயக முன்னணி கண்டனம்
கடந்து 104 நாட்களாக இந்த நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்தியமையானது ஜனநாயக போராட்டங்களில் ஈடுபடுவோரை அச்சுறுத்துவதாகவும், இலங்கை மீதான சர்வதேசத்தின் அபிப்பிராயத்தை சீர்குழைப்பதாகவும் இருக்கின்றதென காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலுக்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்க ஆசிரியர்கள் சங்கம்
அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் போராட்டத்தை அடக்குவதையும் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை மிலேச்சத்தனமாக தாக்குவதையும் இலங்கை அரசாங்க ஆசிரியர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது என இலங்கை அரசாங்க ஆசிரியர்களின் சங்கத்தின் உபதலைவர் ஜீவராசா ருபேஷன் தெரிவித்துள்ள்ளார்.
வவுனியா
காலி முகத்திடல் போராட்டக்காரார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு கோரியும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரகல போராட்டகாரர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டிக்கின்றோம், முடிவல்ல இதுவே தொடக்கம், போராட்ட பூமியில் மக்கள் உணர்வுகளை தீண்டாதே, வேண்டாம் வேண்டாம் ரணில் விக்கிரமசிங்க, மக்கள் குரலை நசுக்காதே, மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளி’ என கோசங்களையும் எழுப்பியிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ரணிலைப் பதவி விலகுமாறு தெரிவித்தும், காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவத்தினரினால் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் புத்தளம் – கொழும்பு முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரணில் ஜனாதிபதியாக பதவியேற்று 24 மணித்தியாலங்களுக்குள் காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்கும் நோக்கில் இராணுவத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியுள்ளனர். இவ்வாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.