முன்னாள் அமைச்சர் தம்மிக பெரேரவால் ஏற்படவுள்ள வெற்றிடத்திற்கு பசில் ராஜபக்ஷவினை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிகளவான உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பசில் ராஜபக்சவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார்.
நட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியில் இருந்து தம்மிக்க பெரேரா விலகவுள்ளார்.
இது குறித்த இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தம்மிக பெரேரா பதவி விலகினால் அவரது வெற்றிடத்திற்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதிலும் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
ரேணுகா பெரேரா, வில்லி கமகே மற்றும் அமரசிங்க ஆகியோரின் பெயர்களே முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கு அந்த பதவியை வழங்குமாறு அதிகளவானவர்கள் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.