குஜராத்தின் பொடாட் மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக பொடாட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை உறுதிப்படுத்தியுள்ளது.
அண்டை மாவட்டமான அகமதாபாத்தின் தண்டுகா தாலுகாவைச் சேர்ந்த ஐந்து பேர் நேற்று சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். பாவ்நகர், பொடாட், பர்வாலா மற்றும் தண்டுகாவில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இன்னும் சுமார் 30 பேர் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, குஜராத் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆஷிஷ் பாட்டியா கூறுகையில், ” போலி நாட்டு மதுபானம் தயாரித்து விற்பனை செய்த பொடாட் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளோம்.
நேற்று அதிகாலை பர்வாலா தாலுகாவின் ரோஜித் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற கிராமங்களில் வசிக்கும் சிலரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து பர்வாலா மற்றும் பொடாட் நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது” என்றார்.
மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும், போலி மது விற்பனை செய்பவர்களை பிடிக்கவும் துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்து அதிகாரியின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்படும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (பாவ்நகர் ரேஞ்ச்) அசோக் குமார் யாதவ் தெரிவித்தார். குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) மற்றும் அகமதாபாத் குற்றப்பிரிவும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.