ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து விரதமிருந்து வழிபடுவது சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், ஆடி அமாவாசை நாள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது மிகச்சிறப்பான நாள் ஆகும். தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாளாகும்.
அதன்படி, இந்த 2022ஆம் ஆண்டின் ஆடி அமாவாசை வரும் 28ஆம் திகதி வியாழக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாளில் நம்முடைய முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து எப்படி வழிபடுவது..? அதற்கான நேரம், காலம் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
பித்ரு தர்ப்பணம் செய்வதற்காக பிரத்தியேகமாக ஆறு நாட்களில் முக்கியமான ஒன்று, ஆடி அமாவாசை ஆகும். இந்த நாட்களில் நாம் சில பொருட்களைத் தானமாக தர வேண்டும்.
பித்ருகளுக்கு திதி கொடுக்கும் பொழுது, ஏழைகளுக்கு உணவு, ஆடை, மற்றும் பசுக்களை தானம் செய்வது மிகவும் சிறப்பு ஆகும். தானத்தில் சிறந்த ஒன்றான, அன்னதானம் செய்தால் தீராத வினையெல்லாம் தீரும் பித்ருக்களின் முழு ஆசிர்வாதம் கிடைக்கும்.
தானியங்களை தானம் செய்வதால் லட்சுமி மற்றும் அன்னை அன்னபூரணி இருவருக்குமே ஆசிகள் கிடைக்கும், அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது ஐதீகம். இந்த 2022 ஆம் ஆண்டின், ஆடி மாதத்தில் அமாவாசை திதி ஜூலை 27ஆம் திகதி இரவு 10.06 மணிக்கு தொடங்குகிறது.
எனவே, நம்முடைய முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை தர்ப்பணம் ஜூலை 28ஆம் திகதி வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
மேலும், இந்த நேரத்தில் தான் பித்ருக்கள், பூலோகத்திலிருந்து மீண்டும் பிதுர் லோகத்திற்கு திரும்பிச் செல்வதாக நம்பப்படுகிறது. எனவே, அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுக்கவும், நினைவில் கொள்ளவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுகிறது.
இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவர்களின் பிள்ளைகளுக்கும் தலைமுறைக்கும் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். நமக்கு வாழ்வில் அனைத்து செல்வங்களும் கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.