இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க யாழ். பல்கலைக் கழகத்துக்கு வருகைதந்து மாணவர்களை நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார்.
இன்று நண்பகல் ஒரு மணியளவில் பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்காக வளாகத்துக்கு வருகைதந்த போதே, வளாகத்தினுள் நின்ற மாணவர்களை நேரடியாகச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார்.
மேலும், மாணவர்களுக்கு பல்கலைக் கழகத்தினுள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “சமுதாயச் சமயலறைக்கு”ச் சென்று மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச மதிய போசனத்தைத் தானும் பெற்று, மாணவர்களுடன் உணவருந்தினார்.
இதன் போது, இலங்கையில் உள்ள ஏனைய பல்கலைக் கழகங்கள் எதிலும் நடைமுறைப்படுத்தப்படாத சமுதாயச் சமயலறை – இலவச மதிய உணவு வழங்கலைச் சுயமாக ஆரம்பித்து, நலன்விரும்பிகளின் நி்திப்பங்களிப்புடன் பல நூற்றுக் கணக்கான மாணவர்களுக்கு உணவு வழங்கலில் ஈடுபட்டிருந்த விரிவுரையாளர்களையும், மாணவர்களையும் பாராட்டினார்.
தொடர்ந்து மாணவர்களின் குறைகளைக் கேட்டறிந்த பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் உடனடியாகவே கல்வி அமைச்சருக்கும் மாணவ பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்றையும் ஏற்பாடு செய்தார்.
பின்னர், மாணவர்களின் வேண்டுகோள்களுக்கு உரிய தீர்வுகளை விரைவில் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜெயந்தவும், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்கவும் உறுதியளித்தனர்.
இந்தச் சந்திப்பின் போது, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினரும் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, ஈழத் தமிழரான அமெரிக்க விஞ்ஞானி பேராசிரியர் சிவா சிவானந்தன், பல்கலைக்கழகப் பதிவாளர் வீ. காண்டீபன், விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜன், மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் இ. சுரேந்திரகுமாரன், மாணவ நலச்சேவைகள் உதவிப் பதிவாளர் எஸ். ஐங்கரன் மற்றும் ஒழுக்காற்று உத்தியோகத்தர் பே. கஜந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.