காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதன் காரணமாக அவரால் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட இயலவில்லை. என்றாலும், காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால் இடைக்கால தலைவராக சோனியா பொறுப்பேற்று கட்சி பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் அடுத்தடுத்து 3 தடவை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு சோனியா மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், ‘காங்கிரஸ் தலைவர் சோனியா மருத்துவ பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுக்கு செல்ல இருக்கிறார். சிகிச்சை முடிந்து திரும்பி வரும் வழியில் அவர் இத்தாலி சென்று தனது தாயாரை சந்தித்து பேசிவிட்டு டெல்லி திரும்புவார்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் சோனியா எந்த நாட்டுக்கு சிகிச்சைக்காக செல்கிறார்? எப்போது செல்கிறார்? என்பன போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. சோனியாவுடன் அவரது மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா காந்தி ஆகியோரும் உடன் செல்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந் தேதி காங்கிரஸ் கட்சியின் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் ராகுல் காந்தி பேசுவது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு செப்டம்பர் 7-ந் தேதி ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து பாத யாத்திரையை தொடங்க உள்ளார். எனவே அதற்கு முன்னதாக அவர் சோனியாவை அழைத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்தல் அடுத்த மாத இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலுக்கான அறிவிப்பும் இந்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவர் பதவியை ராகுல் ஏற்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் சோனியா உடல் நலக்குறைவு மற்றும் கட்சி பணிகளால் ராகுல் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார். இந்த நிலையில் அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்பாரா? என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.