“தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும், தேசிய பிரச்சினைகளுக்கும் அடுத்த சில மாதங்களில் இறுதித் தீர்வு காணப்படும் என நான் நம்புகின்றேன். இது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நான் தற்போது பேச்சு நடத்தி வருகின்றேன்.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
யுத்த காலம்
மேலும் தெரிவிக்கையில்,”யுத்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டது. அந்த யுத்தத்தில் நாம் வெற்றிக் கண்டோம். தற்போது நாம் நாட்டில் சமாதானத்தைக் கொண்டுவர வேண்டும்.
அதைத்தான் நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம். இலங்கையின் எதிர்காலத்தைப் பற்றி நாம் அனைவரும் சிந்தித்தாக வேண்டும்.
இலங்கைக்கு ஆபத்து
தற்போது எதிர்கொண்டுள்ள பயங்கரவாதம், முன்னர் எதிர்கொண்ட பயங்கரவாதத்தைப் போன்றதல்ல. நாம் அவ்வாறான பயங்கரவாதத்தை மீண்டும் எதிர்கொள்ள மாட்டோம் என நம்புகின்றேன்.
எனினும், அதனை முறியடிப்பதற்கு ஏதுவாக எம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
மூன்றாம் தரப்பினரைத் தாக்குவதற்காகப் பயங்கரவாதிகள் இலங்கையைப் பயன்படுத்தக்கூடிய ஆபத்தான நிலை உள்ளது என்பதை நாம் எப்போதும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.
காலநிலை மாற்றம் மற்றும் சுற்றாடல் குறித்தும் நாம் அதிகம் கவனத்தில்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.