கடந்த 2020ம் ஆண்டு முதல் தமிழகத்தின் கோயம்புத்தூரில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் நாடு திரும்ப உதவுமாறு மனுவொன்றை தமிழக மாவட்ட நிர்வாகியிடம் நேற்று (01.11.2022) கையளித்துள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வானதி (வயது 38) என்பவறே இந்த மனுவை வழங்கியுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு மூன்று மாத சுற்றுலா விசாவில் மற்றும் திரும்புவதற்கான டிக்கெட்டுடன் சென்னைக்கு வந்ததாக அவர் கூறியுள்ளார்.
கோவிட் தொற்று
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தனது நண்பர்களை பார்க்க புதுக்கோட்டைக்கு சென்றுள்ள நிலையில் அங்கு சில நாட்களில் கோவிட் முடக்கம் அறிவிக்கப்பட்டதால், நான் புதுக்கோட்டையில் சிக்கிக்கொண்டேன்.
எனது விசா கடந்த 2020 ஆம் ஆண்டு மே 24 ஆம் திகதியன்று காலாவதியானது. ஆறு மாதங்கள் புதுக்கோட்டையில் இருந்தேன், பின்னர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்றேன்.
இந்த ஆண்டு ஜூன் மாதம், நான் ஒரு தனியார் நிறுவனம் மூலம் வெளியேறும் அனுமதிக்கு விண்ணப்பித்தேன். அவர்கள் பதில் அளிக்காததால், நேரடியாக சென்னையில் உள்ள சாஸ்திரி பவனை அணுகினேன்.
அங்குள்ள அதிகாரிகள், நான் நீண்ட காலம் இந்தியாவில் தங்கியமைக்காகவும் விமான அனுமதிச்சீட்டுக்காக 50,000 ரூபாவை செலுத்தவேண்டும் என்று கூறினார்கள்.
குடும்ப சூழ்நிலை
இந்நிலையில் நான் கொண்டு வந்த பணம் தீர்ந்து விட்டது. நான் விவாகரத்து பெற்ற நிலையில் எனக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.
எனது முன்னாள் கணவர் செப்டம்பர் 22ம் திகதியன்று காலமானார். எனது 14 வயது மகளைக் கவனித்துக்கொள்வதற்காக நான் இலங்கைக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.