பாணின் விலை குறைப்பு தொடர்பில் திங்கட்கிழமை(31.10.2022) அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது.
இதற்கமைய 450 கிராம் நிறையுடைய பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாண் விலையை குறைக்க முடியாது
இந்நிலையில் பாணின் விலை குறைப்பு தொடர்பில் தென் மாகாண சிறு மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
வெதுப்பக உற்பத்திகளுக்கு அவசியமான வேறு மூலப்பொருட்களின் விலை குறைவடையாமையால், பாண் இறாத்தலின் விலையைக் குறைக்க முடியாது என தென் மாகாண சிறு மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடக சந்திப்பில் தென் மாகாண சிறு மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா இது குறித்து நேற்று(02.11.2022) கருத்து வெளியிட்டுள்ளார்.
மூலப்பொருட்களின் விலை அதிகம்
மேலும் கூறுகையில்,“புறக்கோட்டை மொத்த சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக உள்ளபோதிலும், கொழும்பிற்கு வெளியே உள்ள இடங்களில் அந்த விலைக்கு கோதுமை மா விற்பனை செய்யப்படுவதில்லை.
கோதுமை மாவையும், தண்ணீரையும் மாத்திரம் கொண்டு பாண் இறாத்தலை உற்பத்தி செய்ய முடியாது. ஏனைய உள்ளீட்டுப் பொருட்களின் விலைகள் குறைவடையவில்லை.
இந்த நிலையில், வெதுப்பகங்களுக்கு, பாண் இறாத்தலின் எடையையும், விலையையும் நிர்ணயிப்பதுடன், கோதுமை மாவுக்கு நிர்ணய விலையை அறிவிக்க வேண்டும்.”என கூறியுள்ளார்.