அனைத்து வகையான சிகரெட்கள் மீதான வரியை குறைந்தது 20 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என மதுசார மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புபுது சுமனசேகரவால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகரெட்டிற்கான வரி
அதில் மேலும், கடந்த சில ஆண்டுகளில், முறையான வகையில் சிகரெட்டிற்கான வரியை அதிகரிக்காததன் காரணமாக, 84 சதவீத பங்கு உரிமை கொண்ட பிரிட்டிஷ் அமெரிக்கன் புகையிலை கம்பெனிக்கு சொந்தமான இலங்கை புகையிலை நிறுவனம் எனப்படும் பன்னாட்டு நிறுவனம் சிகரெட்டுக்கான விலையை உயர்த்தியதன் மூலம், இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்திருக்க வேண்டிய ரூபா 100 மில்லியன்களை இழந்துள்ளது.
சிகரெட் விலையை உயர்த்தியதன் மூலம் நாட்டுக்கு சேர வேண்டிய வரிப்பணம் பிரிட்டிஷ் அமெரிக்க புகையிலை நிறுவனத்தின் இலாபமாக மாறியது. இவ்வாறு வெளிநாட்டு நிறுவனங்கள் இலாபம் பெருவதன் மூலம் உள்நாட்டு பணம் சுரண்டியெடுக்கப்படுகிறது.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூலம் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுமாறு மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் அரசாங்கத்திற்கு வலியுறுத்துகிறது. ஆகவே அனைத்து வகையான சிகரெட்கள் மீதான வரியை குறைந்தது 20 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும்.
வரி கொள்கை
அத்துடன் 2021 வரவுசெலவு திட்ட உரையில் சிகரெட்டுக்கான வரிக்கொள்கை எனும் தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு ஏற்ப நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞான, எளிய மற்றும் பகுத்தறிவு வரி கொள்கை முறையை மிக விரைவாக நிறுவப்பட வேண்டும்.
மேற்படி முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தவும், புகையிலை நிறுவனம் நாட்டிற்கு வெளியே இழுத்தெடுக்கும் இலங்கையர்களின் பணத்தை நாட்டிற்குள் தேக்கிவைப்பதற்கும் நிதியமைச்சு உட்பட அரசாங்கத்தின் பொறுப்பான தரப்பினரை வலியுறுத்த வேண்டும்.
இதற்காக துறைசார்ந்தோர், மதத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், தொழில் வல்லுநர்கள், நாட்டின் மீது அன்பு கொண்ட பொது மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.