நாட்டில் இதுவரை வசூலிக்கப்படாத வீட்டுக்கடன்களை வசூலிக்க முறையான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (22.11.2022) இடம்பெற்ற நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தின் போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
முறையான வேலைத்திட்டம்
அத்துடன் இதேவேலைத்திட்டத்தை நாடாளுமன்றத்தின் அடுத்த ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும் முன்வைக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுகையில், அதிகார சபையிடமிருந்து குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் பெற்ற சிலர் வீடுகளை நிர்மாணிப்பதற்கு பயன்படுத்தவில்லை. பல வீட்டுக்கடன்களில் முதல் தவணை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டுள்ள வீடமைப்பு திட்ட உதவிகள் மற்றும் கடன் திட்டங்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
நகர அபிவிருத்தி நடவடிக்கைகள்
கடன் உதவித் தொகை மற்றும் கடன் வசூலிக்கும் வரை புதிய திட்டங்களை ஆரம்பிக்கப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் நகர அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி கூறுகையில், 2015 – 2019ஆம் ஆண்டு காலப் பகுதியில் உதவிகள் வழங்கப்பட்ட 92,386 வீடுகள் இன்னும் பூர்த்தி செய்யப்பட உள்ளன.
அதற்கு தேவையான தொகை 24,380 மில்லியன் ரூபா ஆகும். வீடுகளுக்கான உதவித் தொகை முழுமையாக வழங்கப்படாததால் அவர்களிடம் தவணை வசூலிப்பதில் சிக்கல் இருக்கிறது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட கடன் தொகையில் மேலும் சுமார் 10 பில்லியன் ரூபா மீளப் பெறப்பட உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.