தமிழீழ விவகாரத்தில் இந்தியா வஞ்சகமும் துரோகமும் செய்தது என தமிழக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ என்ற வை. கோபாலசாமி தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமையகத்தில் நேற்று அதன் பொதுச்செயலாளர் வைகோ கேக் வெட்டி கொண்டாடியதுடன் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகரற்ற சேனைகளை நடத்த கூடிய மாவீரர் பிரபாகரன்
இதனையடுத்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட வைகோ, தமிழர் வரலாற்றில் ஈடு இணையற்ற நிகரற்ற சேனைகளை நடத்த கூடிய மாவீரர் பிரபாகரன். இலங்கை படைகள் பிரபாகரனின் படைகளை தோற்கடித்திருக்க முடியாது.
போரிலே பின்னடைவு ஏற்பட்டாலும் கடைசி வரை மக்களை பாதுகாப்பதிலே அவர் கவனமுடன் இருந்தார். ராஜபக்ச கூட்டம் இன படுகொலை செய்துவிட்டு ஜெனீவா மனித உரிமைகள் மன்றத்தில் இன படுகொலை நடக்கவில்லை எனக்கூறி வருகிறது.
தமிழீழ விவகாரத்தில் இந்தியா வஞ்சகம் செய்தது துரோகம் செய்தது. தமிழீழம் தான் தீர்வு, தமிழை சொல்லி, திருக்குறளை சொல்லி, பாரதியாரை சொல்லி தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என இந்திய பிரதமர் மோடி நினைக்கிறார் அது ஒரு போதும் நடக்காது.
அரசியல் சட்டத்திற்கு விரோதமாக தமிழக ஆளுநர் செயல்படுகிறார். பாரதீய ஜனதாவின் கைப்பாவையாக ஊதுகுழலாக செயல்படுகிறார். தமிழகத்துக்கு விரோதமாக செயல்படுகிறார்.
வைகோவின் உயிர் பிரபாகரனுக்கு கடமைப்பட்டது
மோடி காசி தமிழ் சங்கம் என்கிற பெயரில் தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார். மக்கள் ஏமாற மாட்டார்கள். எதிர்வரும் ஆண்டில் ம.தி.மு.க. சார்பில் தமிழீழ பாசறை பயிலரங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
வைகோவின் உயிர் பிரபாகரனுக்கு கடமைப்பட்டது. ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலை குறித்து மத்திய அரசு மறு சீராய்வு தாக்கல் செய்தது பச்சை துரோகம் எனவும் வைகோ தெரிவித்துள்ளார்.