தேசிய வளங்களை முழுமையாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது தொடர்பில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (02.12.2022) உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தனியார் மயப்படுத்தப்படும் வளங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் தேசிய வளங்களை தனியார் மயப்படுத்தும் மக்களாணை தற்போதைய அரசாங்கத்திற்கும், விசேடமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கிடையாது.
இலங்கை டெலிகொம் உட்பட அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வெளிநாட்டு நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதா?
தேசிய வளங்களை முழுமையாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது தொடர்பில் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் தான்தோன்றித்தனமான முறையில் அந்த தீர்மானங்களை செயற்படுத்த அவதானம் செலுத்தியுள்ளது.
டெலிகொம் நிறுவனம்
இதற்கமைய இலங்கை டெலிகொம் நிறுவனம் இலாபமடையும் நிறுவனமாக காணப்படும் நிலையில் அதனை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
தேசிய வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் போது நாட்டின் இறையாண்மை தேசிய பாதுகாப்பிற்கும்,பொது மக்களுக்கான நலன்புரி திட்டங்களுக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்படும்.
இலங்கை டெலிகொம் நிறுவனத்தை விற்பதற்கு வெளிநாட்டு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளதா?
இலங்கை மின்சார சபை மற்றும் ஏனைய அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதா? இந்த கேள்விகளை தேசிய பிரச்சினையாக கருதி பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”என கூறியுள்ளார்.