இலங்கை பொதுமக்களுக்கு வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை ஒன்றை மத்திய வங்கினால் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நாளாந்தம் நிலவும் பண மோசடிகள் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள பல முறைப்பாடுகளுக்கு அமைய இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
தெரியாத நபர்களின் வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்பு செய்யவோ அல்லது சரியான சரிபார்ப்பு இல்லாமல் வேறு வழிகளில் பணத்தை அனுப்பவோ கூடாது என்று மத்திய வங்கி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
சமீப காலங்களில், தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தனிநபர்களை ஏமாற்றும் மோசடிகள் பல இடம்பெறுவதாகவும், இது தொடர்பாக பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளது
இவ்வாறு தனிநபர்களிடம் பணம் மோசடி செய்தமை தொடர்பாக, பாதிக்கப்பட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்படும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
மேலும், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் தொடர்பாக அல்லது மதிப்புமிக்க பொருட்களைக் கொண்ட பொதிகளை பெறுவதற்கு சுங்கக் கட்டணம் செலுத்துமாறு பொதுமக்களிடம் மோசடிக்காரர்கள் கேட்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, உங்களது தனிப்பட்ட இரகசிய தகவல்களை எந்தவொரு மூன்றாம் தரப்பினருடனும் பகிரக்கூடாது என்று இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான, தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளை நீங்கள் பெற்றால் 011-2477125 அல்லது 011-2477509 என்ற தொலைபேசி எண்ணிற்கு அறியத்தருமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது