சுவிஸ் மாகாண மருத்துவமனை ஒன்றில், செவிலியர் போல நடித்த இளம்பெண் ஒருவர், பிறந்து மூன்றே நாட்களான பிஞ்சுக்குழந்தை ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Lucerne மாகாண மருத்துவமனையில், நேற்று முன் தினம் காலை, செவிலியர் சீருடையில் பிரசவ வார்டுக்குள் நுழைந்த 20 வயதுடைய பெண் ஒருவர், பிறந்து மூன்று நாட்களே ஆன ஒரு குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டார்.
தனது உறவினர் ஒருவரை தொலைபேசியில் அழைத்த அவர், குழந்தை பிறந்துவிட்டது என்று கூறியிருக்கிறார். அந்த உறவினர் பெண், குழந்தை பிறந்ததாகக் கூறிய இளம்பெண்ணின் வீட்டுக்குச் சென்று பார்த்தால், அங்கு ஒரு குழந்தை குளிரில் உறைந்து hypothermia என்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டு பேச்சு மூச்சில்லாமல் கிடந்திருக்கிறது.
உண்மை என்னவென்றால், சமீபத்தில்தான் அந்த இளம்பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது என்ற விடயம் அவரது உறவினருக்குத் தெரியும். ஆகவே, பொலிஸாருக்கு தகவல் கொடுக்க முற்பட்டிருக்கிறார் குழந்தையைத் தூக்கி வந்த பெண்ணின் உறவினரான பெண்.
ஆனால், அதற்குள் விடயமறிந்து மருத்துவ உதவிக்குழுவினருடன் பொலிஸார் அந்த வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
தற்போது அந்தக் குழந்தை நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ள பொலிஸார், குழந்தை திருடு போனதால் அதிர்ச்சியடைந்துள்ள அதன் பெற்றோருக்கு மன நல ஆலோசனை அளிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.