கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டர், பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் வர்த்தகர் தினேஷ் சாப்டர் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப்பிரிவினரும் இணைந்து கொலைச் சம்பவம் தொடர்பில் சுமார் 23 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸிடம் இருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது, கையடக்க தொலைபேசி கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த வர்த்தகரிடம் இருந்து பெறப்பட்ட 143 கோடி ரூபா கடன் தொகை தொடர்பில் நிலவி வரும் சர்ச்சை தொடர்பில் அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குமூலம் பதிவு
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம், கொழும்பு குற்றப்பிரிவு உள்ளிட்ட நான்கு குழுக்களைப் பயன்படுத்தி பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இருப்பினும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை திட்டமிட்ட கொலையா? அல்லது மிரட்டி அதிக தூரம் கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதற்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொரளை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கைரேகை உத்தியோகத்தர்கள் ஏனைய விஞ்ஞான ஆதாரங்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ள முக்கிய தகவல்
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளரான 51 வயதான தினேஷ் சாப்டர், நேற்று (15) பிற்பகல் 2.05 மணியளவில் கொழும்பு 07, மால் வீதியில் உள்ள தனது வீட்டில் இருந்து 143 கோடி ரூபாவை மோசடி செய்த BT என்ற வர்த்தகரை சந்திப்பதற்காக புறப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தமது நிறுவனத்தின் செயல் அதிகாரிக்கு அவர் தகவல் தெரிவித்த நிலையில், லைவ் லொகேஷனை அனுப்புமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மதியம் 2.05 மணியளவில் தினேஷ் சாப்டர் வீட்டை விட்டு வெளியேறி, பிற்பகல் 2.48 மணிக்கு,தினேஷ் சாப்டர் தனது மனைவி மற்றும் நிர்வாக அதிகாரியுடன் நேரலை இடத்தைப் பரிமாறிக்கொண்டுள்ளதாகவும், அவர் பொரளை மயானத்தில் இருந்தமையை உறுதி செய்துள்ளது.
இருப்பினும், இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, அது தொடர்பான இணைப்புகள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.



















