கிளிநொச்சி – பளை முல்லையடி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்துடன் தொடர்புடைய இ.போ.ச சாரதியை எதிர்வரும் ஜனவரி 4ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பஸ் ஒன்று கடந்த செவ்வாயன்று பளைப்பகுதியில் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானது.
அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் பலி
சம்பவத்தில் முல்லைத்தீவு வலயக்கல்வி அபிவிருத்தி உத்தியோகஸ்த்தராக கடமையாற்றும் 32 வயதான சாவகச்சோி – அரசடி பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் சுகிர்தினி என்ற இளம் தாயார் உயிரிழந்தார்.
அத்துடன் இந்த விபத்தில் 17க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுக்குள்ளாகினர். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பளைப் பொலிஸார் விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதியை கைது செய்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றில் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது பஸ் சாரதியை எதிர் வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்ககிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றம் கட்டளையிட்டுள்ளது.