கையடக்க தொலைபேசி செயலி மூலம் பல்வேறு நபர்களின் தனிப்பட்ட விபரங்களைப் பெற்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் ஒரு கோடிக்கும் அதிக பண மோசடியில் ஈடுபட்ட 3 சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அண்மையில் இது தொடர்பில் 12 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இணையவழியூடான பொருள் விற்பனைக்காக நபர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைப் பெற்று அதன் மூலம் மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மோசடி
இவ்வாறு குறித்த சந்தேகநபர்கள் பல்வேறு நபர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. அத்தோடு இவர்கள் ஏ.டி.எம். இயந்திரத்திலும் கொள்ளையிட்டமையும் பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பாவனைக்காகவே தாம் இவ்வாறான கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகநபர்கள் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.
இணையதளத்தினூடான பணப்பறிமாற்றல், பொருட் கொள்வனவு தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.