உயிருடன் இருக்கும் போது காதல் ஜோடிகளை பிரித்த உறவினர்கள், அவர்கள் தற்கொலை செய்து இறந்த பிறகு அவர்களின் சிலைகளுக்கு திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் ஒன்று இந்தியாவில் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் குஜராத் மாநிலம் டாபி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (25) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சனா (22) என்பவரும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
அப்போது, “எனக்கு நல்ல வேலை கிடைத்த பிறகு நமது காதல் குறித்து வீட்டில் சொல்லலாம்” என ரஞ்சனாவிடம் கணேஷ் கூறியுள்ளார்.
அதன்படியே, இன்ஜினியரான கணேஷுக்கு ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்த பின்னர் காதல் விவகாரம் குறித்து வீட்டில் கூறியபோது அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை
மேலும், தங்கள் பேச்சை மீறி திருமணம் செய்து கொண்டால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து காதல் ஜோடிகள் , கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஊருக்கு வெளியே உள்ள ஒரு மரத்தில் ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
அதன்பின்னர் , கணேஷ் மற்றும் ரஞ்சனா வீட்டில் அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்தன. பெரும் தொழில் நஷ்டமும் ஏற்பட்டது.
அதோடு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கனவுகளிலும் கணேஷ், ராஞ்சனாவின் ஆவிகள் வந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
ஆவிகளின் சேட்டையால் பயந்து போன இரு வீட்டாரும் ஜோதிடர்களை பார்த்துள்ளனர். அப்போது அனைத்து ஜோதிடர்களும் சொல்லி வைத்தது போல, இளம் ஜோடிகள் நிராசையால் உயிரிழந்திருப்பதாகவும், அவர்களை சிலைகளாக வடித்து திருமணம் செய்து வைத்து விடுமாறும் கூறியுள்ளனர்.
அதன்படியே, கடந்த வாரம் இரு வீட்டாரும் சேர்ந்து உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து, கணேஷ் – ராஞ்சனா ஜோடிகளின் சிலைகளை உருவாக்கி அதற்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்தார்களாம்.