வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக நேற்று (21.01.2023) காலை தொடக்கம் மதியம் 12.00 மணி வரையிலான காலப்பகுதியில் 8 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்தன.
அதன் அடிப்படையில் ஈழமக்கள் ஜனநாயக் கட்சி , தமிழ் தேசிய கூட்டமைப்பு , ஐக்கிய மக்கள் சக்தி , தமிழரசுக் கட்சி , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் , தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி , ஐக்கிய மக்கள் கட்சி , ஐக்கிய தேசிய கட்சி , புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி , சுயேட்சைக் குழுக்கள் 3 என 8 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனு தாக்கல் மேற்கொண்டிருந்தன.
மேலும் அசம்பாவிதங்கள் எவையும் இடம்பெறாத வண்ணம் வவுனியா மாவட்ட செயலகத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று (21.01.2023) வேட்பு மனுவை தாக்கல் செய்தது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அ.மேழிக்குமரனின் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்தனர்.
வவுனியா மாவட்டத்திலுள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா மாவட்டத்திற்கான தேர்தல் முகவர் ஜி.ரி.லிங்கநாதனும் இதன்போது பிரசன்னமாகியிருந்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி
வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (21.01.2023) காலை வேட்பு மனுவை தாக்கல் செய்தது.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர்களான ரோ.ரசிகா மற்றும் நிரோஸ் ஆகியோரின் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்தனர்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள மாநகரசபை உட்பட 5 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
வவுனியா மாவட்டத்தின் வேட்பு மனு முடிவுகள்
வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் வேட்புமனு தாக்கல் முடிவுகள் வெளியாகியுள்ளதுடன், சில கட்சிகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான பி.ஏ சரத்சந்திர தெரிவித்தார்.
அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வவுனியா வடக்கு பிரதேச சபையில் சுயேட்சைக்குழு ஒன்றின் வேட்பு மனு முழுமையாக நிராகரிக்கப்பட்டதுடன், வவுனியா தெற்கு சிங்கள பிரதே சபையில் வேட்புமனுக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச சபையில் இரு கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அத்துடன் வவுனியா மாநகரசபையில் இரு கட்சிகளும், இரு சுயேட்சைக்குழுக்களும் நிராகரிகப்பட்டுள்ளன.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் இரு கட்சிகளும், இரு சுயேட்சைக் குழுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.