இந்த நாட்டில் இருக்கின்ற மக்கள் தேர்தல் மூலமாக, 74 வருட சாபக்கேட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திடசங்கற்பம் பூண்டுள்ள சூழ்நிலையில் ரணில் ராஜபக்ச அரசாங்கம் எப்படியாவது தேர்தலை நிறுத்த வேண்டும் என கங்கணம் கட்டுகின்றதாக ஜே.வி.பியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்திரசேகரன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (26.01.2023) நடந்த ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தேர்தலை பிற்போடுகின்ற செயற்பாட்டிற்கான ரணில் மற்றும் ராஜபக்ச அரசாங்கத்தின் அனைத்து சதி, சூழ்ச்சி வலைகளும் அறுத்து வீசப்பட்டுள்ளன. ஆனால் ரணில் மற்றும் ராஜபக்ச அரசாங்கம் தேர்தலை பிற்போடுகின்ற செயற்பாட்டில் இருந்து விலகவில்லை.
ரணில் மற்றும் ராஜபக்ச அரசாங்கம்
இவ்வாறு அவர்கள் விலகாமைக்கான காரணங்களை பார்க்கின்ற போது, நடக்கவிருக்கின்ற தேர்தலின்படி மார்ச் 9ஆம் திகதி வெளிவரும் தேர்தல் முடிவுகளானது ரணில் மற்றும் ராஜபக்ச அரசாங்கத்தினை வீட்டிற்கு அனுப்புவதாக அமையும்.
ஏனெனில், கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி, ஜுன் 9ஆம் திகதி, ஜுலை 9ஆம் திகதி என்பன இந்த நாட்டின் கேடுகெட்ட ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்பிய நாளாகும்.
ரணில் மற்றும் ராஜபக்ச அரசாங்கம் புதிய ஒரு நாடகம் ஒன்றினை ஆடுவதற்கு ஆரம்பித்துள்ளது. அதாவது தேர்தல் ஆணைக்குழுவில் உள்ள அதிகாரிகளை பதவி விலக்குகின்ற அல்லது தங்களது விருப்பத்துடன் பதவி விலகுகின்ற நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.
அதன்படியே தேர்தல் ஆணையகத்தின் உறுப்பினர்களில் ஒருவரான பி.எஸ்.சாள்ஸ் நேற்று (25.01.2023) பதவி விலகியுள்ளார்.
சாள்ஸிடம் நாங்கள் கூறுவது வேறு எதுவுமல்ல, தேர்தல் ஆணைக்குழு என்பது வேறு எதற்காகவும் உருவாக்கப்படவில்லை, தேர்தல் நடத்துவதற்கு உருவாக்கப்பட்டதே ஆகும்.
தேர்தல் என்பது வேறு எதுவுமல்ல, இந்த மக்களுக்கு கிடைத்திருக்கின்ற உரிமையாகும் என தெரிவித்துள்ளார்.