இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான பொருளாதார வர்த்தகப்பரிவர்த்தனை நடவடிக்கைகளில் இந்திய ரூபாவினைப் பயன்படுத்துதல் தொடர்பில் உயர்மட்ட பிரதிநிதிகள் கூட்டாக ஆராய்ந்துள்ளனர்.
இது குறித்த கலந்துரையாடலொன்று கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கலந்துரையாடலில் இலங்கை வங்கி, ஸ்டேட் பாங்க் ஒஃப் இந்தியா மற்றும் இந்திய வங்கி ஆகிய கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கி மற்றும் இந்திய ரிசேர்வ் வங்கி என்பன இணைந்து இதனை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை ஆரம்பித்ததை அடுத்து, தாம் இந்திய ரூபாவினைப் பயன்படுத்திக் கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபட்டுவருவதாக வங்கிகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
அதுமாத்திரமன்றி இந்திய ரூபாவினைப் பயன்படுத்திக் கொடுக்கல், வாங்கல்களின் ஈடுபட்டதன் மூலம் குறுகிய காலக்கெடு, குறைந்தளவிலான பரிமாற்றக்கட்டணங்கள், இலகுவான வர்த்தகக்கடன்வசதிகள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை அடைந்துள்ளதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்தியப்பாடு
அதேபோன்று வருமான அதிகரிப்பு மற்றும் சுற்றுலா போன்ற துறைகளில் இச்செயற்திட்டத்தின் சாதகமான பங்களிப்பு, மற்றும் இதனை ஏனைய துறைகளில் பயன்படுத்துவதற்கான சாத்தியப்பாடு குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
அதேவேளை இந்நிகழ்வில் நிகழ்நிலை முறைமையின் ஊடாகக் கலந்துகொண்டிருந்த இந்திய ரிசேர்வ் வங்கி அதிகாரிகள், தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ள மூலதனக்கணக்கு பரிவர்த்தனைகளுக்கு அப்பால், நடைமுறைக்கணக்கு பரிவர்த்தனைகளையும் இந்திய ரூபாவினைப் பயன்படுத்தி மேற்கொள்வதற்கான சாத்தியப்பாடு தொடர்பில் எடுத்துரைத்தனர்.
அத்தோடு இலங்கை மத்திய வங்கியுடன் நெருக்கமான ஒத்துழைப்பைப்பேண விரும்புவதாகத் தெரிவித்த அதிகாரிகள், இந்நடவடிக்கைகளை மேலும் சீராக ஒழுங்கமைப்பதை முன்னிறுத்தி அர்ப்பணிப்புடன் செயலாற்றிவருவதாகவும் தெரிவித்தனர்.
நிகழ்வில் கல்லந்துகொண்டு உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதில் இந்தியா வழங்கிய வலுவான உத்தரவாதம் உள்ளடங்கலாகக் கடந்த ஆண்டு இந்தியாவினால் வழங்கப்பட்ட அனைத்துவிதமான உதவிகளையும் நினைவுகூர்ந்ததுடன் இருநாடுகளுக்கும் இடையிலான மிகநெருங்கிய பொருளாதார ஒத்துழைப்பையும் பாராட்டினார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, வர்த்தகம்சார் பரிவர்த்தனைகளை இந்திய ரூபாவில் மேற்கொள்வதற்கு இலங்கை – இந்திய வர்த்தக சமூகத்தினரால் முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் தொடர்பில் சுட்டிக்காட்டினார்.
அதோடு நடைமுறைக்கணக்கு மற்றும் முழு அளவிலான மூலதனக்கணக்கு ஆகியவற்றின் மூலமான பரிமாற்றங்களிலும் இச்செயற்திட்டத்தை விஸ்தரிப்பது குறித்தும் பிரஸ்தாபித்தார்.
மேலும் இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ‘வர்த்தக மற்றும் முதலீட்டு செயற்பாடுகளை அடிப்படையாகக்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் இருநாடுகளுக்கும் இடையில் வலுவானதும், நெருக்கமானதுமான ஒத்துழைப்பினைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் இச்செயற்திட்டம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டார்.
அத்துடன் , இருநாடுகளுக்கும் இடையிலான டிஜிட்டல் முறையிலான கொடுப்பனவுகள், பரஸ்பர பொருளாதார நல்லுறவை மேம்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள், டிஜிட்டல் முறையிலான கொடுக்கல், வாங்கல்களில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு என்பன பற்றியும் கருத்து வெளியிட்டிருந்தார்.