யாழ். மாநகர சபையின் எஞ்சியுள்ள பதவிக் காலமான 9 தினங்களுக்கு புதிய இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
குறித்த வாக்கெடுப்பு இன்றைய தினம் (10.03.2023) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட், பெப்ரவரி 28ஆம் திகதி சமர்ப்பித்த 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பிலும் அது பெரும்பான்மை இல்லாமல் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாகப் பதவி இழந்திருந்தார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி
அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் இன்றைய தினம் (10.03.2023) கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகர சபையில் ஒரு உறுப்பினர் உயிரோடு இல்லாத காரணத்தினால், மீதமுள்ள 44 உறுப்பினர்களில் 22 பேர் கூட்டத்துக்கு வந்தால் மட்டுமே கூட்டத்தை நடாத்தி, புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்ய முடியும்.
புதிய முதல்வர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினருமான சொலமன் சூ.சிறிலை நியமிப்பதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பிரேரிக்கக் கடந்த வாரம் கட்சி முடிவு செய்திருப்பதாக அதன் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ் அரசுக் கட்சியின் மாநகர சபை உறுப்பினரான சொலமன் சூ.சிறிலின் பெயர் ஒரேயொரு பிரேரணையாக முன் வைக்கப்பட்டாலும், அவரை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ செய்யாமல், வாக்கெடுப்பில் கலந்து கொள்வதைத் தவிர்க்கவுள்ளதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் தரப்பு உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
கட்சிகளின் தலைமைகள்
இவர்களைப் போலவே ஈபி.டி.பி உறுப்பினர்களும் கூட்டத்துக்குச் சென்றாலும் வாக்கெடுப்பு மண்டபத்தினுள் நுழையாமல், நிறைவெண்ணைத் தவிர்ப்பது என்று முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இதனால் மணிவண்ணன் தரப்பின் 10 பேருடன், மணிவண்ணன் தரப்புக்குத் தாவியுள்ள தமிழ் அரசுக் கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவர், ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் இருவருமாக 13 பேரும், ஈ.பி.டி.பி யின் 7 பேரும், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகியிருக்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இருவர் கூட்டத்துக்குச் செல்ல மாட்டார்கள் என அறியமுடிகிறது. எஞ்சிய 22 பேரில், ரெலோவின் பிரதி மேயர் மற்றும், புளொட்டின் மூன்று உறுப்பினர்களுமாக நான்கு பேரைக் கூட்டத்துக்குச் செல்ல வேண்டாமென அந்தந்தக் கட்சிகளின் தலைமைகளால் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
அதனால் மீதமுள்ள 18 பேரோடு கூட்டத்தை நடாத்த முடியாத நிலையுண்டு. எனவே கூட்டம் கோரமின்றி ஒத்திவைக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகளே அதிகமாகக் காணப்படுகின்றன.
பதவிக் காலத்தின் நிறைவு
எனினும், புளொட் மற்றும் ரெலோவின் கட்சித் தலைமைகள் தமது முடிவை மாற்றிக் கொண்டால் முதல்வர் தெரிவில் சொலமன் சூ.சிறில் முதல்வராகத் தெரிவு செய்யப்படலாம்.
இதேநேரம், 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இதுவரை அங்கீகரிக்கப்படாத நிலையிலும், முதல்வர் ஒருவர் பதவியில் இல்லாத காரணத்தினாலும் பிரதி முதல்வர் து.ஈசன் கடந்த முதலாம் திகதி முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை அத்தியாவசிய செலவினங்களை மேற்கொள்வதற்கு ஆளுநரால் அங்கீகாரமாக்கப்பட்டுள்ளது.
முதல்வர் தெரிவு இடம்பெறாவிடில் எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி வரை – சபையின் நீடிக்கப்பட்ட பதவிக் காலத்தின் நிறைவு வரை பிரதி முதல்வரே சபையைக் கொண்டு நடத்தும் நிலையும் தோன்றும்.