மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தொடர்ந்து விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து, முன்னோர் வழிபாட்டினை மேற்கொள்ள முடியாதவர்கள் இந்த 3 அமாவாசைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்டுகிறது.
வருடத்தில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
இதனால் வருடம் முழுவதும் வரும் அனைத்து அமாவாசைகளிலும் விரதம் இருந்து வழிபட்ட பலன் கிடைத்து விடும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
தர்ப்பணம்
அமாவாசை தர்ப்பணம் கொடுப்பதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று இறந்து போன தனது முன்னோர்களுக்காக கொடுப்பது. இதை பித்ரு தர்ப்பணம் அல்லது பிதுர் தர்ப்பணம் என்பார்கள்.
மற்றொன்று காருண்ய தர்ப்பணம் ஆகும். இது உலகத்தில் உள்ள தாய் – தந்தை இல்லாத அனைத்து ஜீவராசிகளுக்கும் கொடுப்பதாகும். காருண்ய தர்ப்பணம் என்பது யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
அமாவாசை
அமாவாசை என்பது முன்னோர் வழிபாட்டிற்கான நாளாகும். மாதந்தோறும் அமாவாசை நாட்களில் இறந்து போன முன்னோர்களுக்கு அளிப்பதற்கு தர்ப்பணம் என்று பெயர்.
ஒருவர் இறந்த தமிழ் மாதத்தன்று என்ன திதி உள்ளதோ அடுத்த ஆண்டு அதே தமிழ் மாதத்தில் அந்த தேதியில் கொடுப்பதற்கு பெயர் சிரார்த்தம்.
இது ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் செய்வதாகும். இந்த சிரார்த்தம் என்பது யார் இறந்து போனார்ளோ அவர்களுக்கு மட்டும் கொடுப்பதாகும்.
ஆனால் தர்ப்பணம் என்பது இறந்து போன, விட்டுப் போன நம்முடைய முன்னோர்கள் அனைவருக்கும் சேர்த்து கொடுக்கப்படுவது தர்ப்பணம் ஆகும்.
இப்படி விடுபட்டு போன முன்னோர் வழிபாடு மற்றும் அமாவாசை விரதங்களை தொடர்ந்து கடைபிடிக்க முடியாமல் போனவர்கள் பித்ரு கடன் நிறைவேற்றுவதற்கு உரிய நாள் ஆடி அமாவாசையாகும்.
அமாவாசை அன்று செய்ய வேண்டியவை
தாய், தந்தை இல்லாத, மனைவியை இழந்த குழந்தைகளை இழந்த ஆண்கள் கண்டிப்பாக அமாவாசை விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
கணவனை இழந்த பெண்கள் அமாவாசை விரதம் இருந்து, எள்ளும் தண்ணீரும் இரைத்து தர்ப்பணம் கொடுக்கலாம். மகன், விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்தாலும் பெண்களும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
சுமங்கலி பெண்கள் கணவர் உயிருடன் இருக்கும் போது இறந்து போன தனது தாய், தந்தைக்காக தர்ப்பணம் கொடுக்க கூடாது. அவர்களுக்காக படையல் போட்டு வழிபாடு மட்டுமே செய்யலாம்.
தாய், தந்தையை இழந்த, திருமணமாகாத கன்னிப் பெண்ணாக இருந்தால் அவர்களும் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது. இறந்தவர்களுக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து, படையலிட்டு மட்டுமே வழிபட வேண்டும்.
அமாவாசை விரத முறைகள்
அமாவாசை விரதத்திற்கு சமைக்கும் சுமங்கலி பெண்கள் வெறும் வயிற்றுடன் சமைக்கக் கூடாது.
அமாவாசை விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக காலை உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது. தங்களை பெற்ற தாய்- தந்தைக்காக ஒரு நாள் சாப்பிடாமல் இருப்பதே சிறப்பானதாகும்.
காலையில் எள்ளும் தண்ணீரும் இரைத்து, தர்ப்பணம் கொடுத்த பிறகு, காகத்திற்கு உணவு வைத்த பிறகு, படையலிட்டு பகல் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுமங்கலி பெண்கள் மற்றும் கன்னிப் பெண்கள் தங்கள் கைகளால் அமாவாசை நாளில் ஏதாவது தானம் வழங்கினாலே அது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பலனை பெற்று தரும்.
அன்னதானம்
அமாவாசை நாளில் கண்டிப்பாக ஒருவருக்காவது அன்னதானம் அளிக்க வேண்டும்.
அமாவாசை அன்று நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் வீட்டிலேயே எள்ளும், தண்ணீரும் இரைத்த பிறகு சூரியனை வழிபட்டு விரதம் இருக்கலாம்.
வீட்டில் எள்ளும் தண்ணீரும் இரைப்பவர்கள் உள்ளங்கையில் கருப்பு எள் வைத்து, பெரு விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கு இடையே தண்ணீர் இரைத்து விட வேண்டும்.
எள்ளும் தண்ணீரும் இரைக்கும் போது காசியை மனதில் நினைத்து வழிபட்டு, யாருக்காக தர்ப்பணம் கொடுக்கிறோமோ அவர்களின் பெயரை சொல்லி தாத்தா, பாட்டி என முன்னோர்களின் பெயர்களை சொல்ல வேண்டும்.
தாத்தா – பாட்டிக்கு முன்பு வாழ்ந்தவர்களின் பெயர் தெரியவில்லை என்றால் பெயர் தெரியாத அனைவருக்கும் என குறிப்பிட்டு எள்ளும், தண்ணீரும் இரைக்க வேண்டும்.