“நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிலும், ஈஸ்டர் தினத் தாக்குதல்களிலும் ராஜபக்சக்கள் தொடர்புபட்டுள்ளனர் என்று ‘சனல் 4’ தொலைக்காட்சி வெளியிட்டுள்ள காணொளியில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே, ராஜபக்சக்களை கைது செய்து சிறைச்சாலையில் அடைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.” என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
“இலங்கையை மாத்திரமல்ல ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ‘சனல் 4’ வெளியிட்டுள்ள காணொலியை நிராகரிக்க முடியாது. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை கட்டாயம் வேண்டும்” – என்றும் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.
“2019இல் மக்களைக் கொன்றுவித்து ஆட்சியைப் பிடித்த ராஜபக்சக்கள், கடந்த ஆண்டு (2022) மக்களைப் பட்டினியால் சாகடித்து ஆட்சியைத் தக்கவைக்கலாம் என்று கனவு கண்டுள்ளார்கள்.
ஆனால், வீறுகொண்டு எழுந்த மக்கள், ராஜபக்சக்களைக் கூண்டோடு பதவிகளிலிருந்து விரட்டியடித்தார்கள்” – என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“சகல விதமான ஊழல், மோசடிகளிலும் ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்புபட்டுள்ளனர். எனவே, ராஜபக்சக்கள் சிறைக்கு அனுப்பியே தீர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் வலியுறுத்தியுள்ளார்.