இலங்கையின் எதிர்கால கடன் தவணைகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த சில தினங்களில் உடன்படிக்கைக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக Bloomberg இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பாக கடனாளிகளுடன் நடந்து வரும் கலந்துரையாடல்களின் பின்னணியில் சர்வதேச நாணய நிதியம் சாதகமாக பதிலளிக்கும் என அந்த அறிக்கை கூறப்பட்டுள்ளது.
மொரோக்கோவில் நடைபெற்ற உலக வங்கி குழு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டத்தின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கையுடன் பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கு நெருக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் மறுசீரமைப்பு
பாரிஸ் கிளப் மற்றும் பிற கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு விவாதங்கள் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு இந்த வாரத்தில் இலங்கையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலக்கு வைத்துள்ளது. ஆனால் மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என Bloomberg இணையத்தளம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு கடன்
இதேவேளை, 12 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை மறுசீரமைக்க வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் குழுவொன்று இலங்கை அரசாங்கத்திடம் யோசனைகள் முன்வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த 2ஆம் திகதி முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இலங்கை அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை என ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.