காஸாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,300ஐ தாண்டியுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில் 2,329 பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 9,714 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவி பொதுமக்கள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி ஒரு வாரத்திற்கு மேல் ஆகுவதாகவும் இஸ்ரேலில் இதுவரை 1,300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலடியாக அன்றிலிருந்து காஸாவில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இஸ்ரேல் ராணுவம் தரை, வான், மற்றும் கடல் வழித் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக இஸ்ரேல் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆனால் எந்த இடத்தில் எத்தனை மணிக்கு என வேறு எந்த குறிப்பிட்ட தகவலையும் தெரிவிக்கவில்லை.
தரை வழி தாக்குதல்
தரை வழியில் ஆக்ரோஷமான தாக்குதல் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யூ போர்க் களத்தில் உள்ள வீரர்களிடம் “அடுத்த கட்டம் வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் பாலத்தீனர்களை தெற்கு நோக்கி நகர இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் கால்நடையாகவும் வாகனங்களிலும் சென்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் இஸ்ரேலின் இந்த உத்தரவைக் கண்டித்துள்ளது. மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளை வெளியேறச் சொல்வது மரண தண்டனைக்கு சமம் என்று கூறியுள்ளது.
இந்நிலையில் வடக்கு காசாவிலிருந்து தெற்கு நோக்கி சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இறந்துள்ளதை சர்வதேச ஊடகம் உறுதி செய்துள்ளது.
காஸா மக்கள் வெளியேற 3 மணிநேரம் அவகாசம்
காசா மக்கள் வெளியேற பாதுகாப்பான வழித்தடம் மூன்று மணி நேரங்களுக்கு திறந்திருக்கும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவில் இன்னமும் இருப்பவர்கள், அவர்கள் நேரப்படி காலை 10 மணி முதல் மதியம் 1 மணிக்குள் வெளியேற வேண்டும் என எச்சரித்துள்ளது.
பெய்ட் ஹனூன் பகுதியிலிருந்து கான் யூனிஸ் பகுதிக்கு செல்லும் நேரடி வழியாக மட்டுமே மக்கள் செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.
இந்த வழித்தடத்தில் தாக்குதல் நடத்தப்படாது என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காஸா மக்கள் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் எனக் கூறும் இஸ்ரேல் கடந்த இரண்டு நாட்களில் மக்களுக்கான காலக்கெடுவை மாற்றிக்கொண்டே வந்துள்ளது.
வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தபோது 24 மணிநேரத்தில் வெளியேற வேண்டும் எனக் கூறியது. அப்போது இரண்டு வழித்தடங்களில் செல்லலாம் என்று கூறியது.
எனினும் வெளியேறிக் கொண்டிருந்த மக்கள் சென்ற வாகனங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றது.
காசாவை தரை, வான், கடல் வழியே தாக்கத் தயாராகும் இஸ்ரேல்
காசாவில் தரைவழி தாக்குதலை தொடங்கத் தயாராகி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“லட்சக்கணக்கான ரிசர்வ் படை வீரர்கள் உதவியுடன் மிகப்பெரிய தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறோம்.
அதற்குத் தேவையான அத்தியாவசியமான தளவாடங்கள் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.
நாடு முழுவதும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளர்” என்று கூறப்பட்டுள்ளது.
எரிபொருள், உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை
காசாவை இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ள நிலையில், அங்கு எரிபொருள், உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் வரை இந்த முற்றுகை நீடிக்கும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை அளிப்பதற்காக முற்றுகையைத் திரும்பப் பெறுமாறு ஐ.நா. சபை இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.
காசாவுடனான இஸ்ரேல் எல்லையில் சுமார் 3,00,000 பாதுகாப்பு வீரர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது.
இதற்கிடையே இஸ்ரேல் நாட்டிற்குள் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் லெபனானில் இருந்து எல்லை தாண்ட முயற்சித்த ஏராளமானோரைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.