கல்முனை நீதிவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய சமீபத்தில் கைப்பற்றப்பட்ட மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை கொத்தமல்லிகளை அழிக்கின்ற செயற்பாடு இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த மாதம் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால் கல்முனை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மனித பாவனைக்கு உதவாத மல்லியை பதுக்கி வைத்திருந்த வர்த்தக களஞ்சியசாலைகள் சோதனை செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேலும், கைப்பற்றப்பட்ட கொத்தமல்லியை பரிசோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி அறிக்கை பெறுமாறும் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் கட்டளையிட்டிருந்தார்.
இந்நிலையில், கைப்பற்றப்பட்டிருந்த கொத்தமல்லிகளின் மாதிரிகள் தொடர்பான இரசாயனப் பகுப்பாய்வு பிரிவினரின் அறிக்கை கிடைக்கப் பெற்றதை அடுத்து கல்முனை நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கமைய சான்று பொருட்களாக நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டிருந்த 90 மூடைகளில் உள்ளடங்கியிருந்த சுமார் 2250 கிலோ கிராம் எடையுடைய கொத்தமல்லிகள் யாவும் கனரக வாகனத்தின் உதவியுடன் பாரிய குழி தோண்டப்பட்டு அதில் கைப்பற்றப்பட்ட கொத்தமல்லிகள் கொட்டப்பட்டு மண்ணெண்ணெய் இட்டு கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கொத்தமல்லிகள் யாவும் சல்பர் இரசாயனம் கலக்கப்பட்டிருந்ததுடன் அனுமதிக்கப்பட்ட விகிதத்தை விட அதிகளவாக மனித பாவனைக்கு உதவாத வகையில் கலக்கப்பட்டிருந்தமையை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு நடவடிக்கைகளின் அடிப்படையிலும் மற்றும் அரச இராசயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையையடுத்து அழிக்கப்பட்டது.
இதன்போது நீதிமன்ற அதிகாரிகள், அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் புலன் விசாரணை உத்தியோகத்தர்கள் , பிராந்திய பொது சுகாதார பரிசோதகர்கள் ,உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர்.