மாத்தறை மாவட்டத்தில் நில்வளா கங்கையில் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதால் அதனை அண்டிய தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை நீர்ப்பாசன திணைக்களம் பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தெரிவித்தார். மழைப்பொழிவு மற்றும் நில்வளா கங்கையின் நீர் மட்டம் ஆகியவற்றை ஆராய்ந்த பின்னரே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, கொட்டபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, பஸ்கொட, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர பிரதேச செயலகப் பிரிவு ஆகிய பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த பகுதிகளை கடந்து செல்லும் வாகன சாரதிகள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் கோருவதாக நீர்ப்பாசன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.