இலங்கை நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்கும் அவர்களின் சிறப்புரிமைகளை நிர்ணயம் செய்வதற்கும் ஒழுக்க மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தனியான அதிகார சபை ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்று நேற்றைய தினம் (23-10-2023) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இந்த அதிகார சபை ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவைக் கொண்டதாக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
8 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரிக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களது சிறப்புரிமையை மறுசீரமைப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதன் அடிப்படையில் பல்வேறு கொள்கைகளை வகுக்கும் நோக்கில் இந்த அதிகார சபையை அமைப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பிரேரணையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.